விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலி போராளிகள் பலர் என்னோடு சந்திக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். அந்தவகையில் இன்று புனர்வாழ்வுபெற்ற புலிகள் சார்ந்த போராளிகளை வவுனியாவில் சந்தித்திருந்தோம்.
தாங்கள் கடந்த காலங்களில் வறுமையிலும், எதிர்காலமற்ற நிலையில் இருப்துடன், கூட்டமைப்பு தங்களுக்கு உதவவில்லை என்ற கருத்தை அவர்கள் முன்வைத்திருந்தனர். எதிர்காலத்திலாவது கூட்டமைப்பு தங்களுக்கு உதவவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மக்களுடைய வாக்குகள் பிளவுபடாமல் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வருகின்ற தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அவர்கள் எமக்கு கூறியிருக்கின்றார்கள்.
இறுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி என்ற பெயரில் என்னிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அப்படி ஒரு கட்சியோடு பேச வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் விடுவிக்கபடவில்லை. போராளிகள் தரப்பில் பேசப்போவதாகவே எனக்கு தெரிவித்திருந்தார்கள்.
எதிர்காலத்தில் போராளிகள் எங்களோடு இணைந்து செயற்பட வேண்டும் என்ற வகையில் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். எனவே இந்த சந்திப்பானது போராளிகள் என்ற வகையில்தான் இடம்பெற்றது.
கட்சி சார்பாக அவர்கள் தந்திருக்கும் கோரிக்கை தொடர்பாக தமிழரசு கட்சியிடத்திலும், கூட்டமைப்பின் தலைவர்களோடும் பேசிய பின்னர் தான் பதில் தர முடியும் என்று அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன்.
அத்துடன் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அதன் மூலம் ஒரு பொது வேலைத்திட்டத்தை நோக்கி செயற்பட வேண்டிய எதிர்காலத்தை கொண்டிருக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒவ்வொரு தேர்தல்களிலும் முன்வைத்த கோரிக்கைளின் அடிப்படையில் செயற்பட்டு வந்திருக்கின்றோம். அந்த தேர்தல் அறிக்கைளின் அடிப்படையில் தமிழ் மக்கள் எம்மை தமது பிரதிநிதிகளாக அங்கிகரித்து வந்திருக்கின்றனர். நாம் இதுவரை செய்த விடயங்களையும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் எமது தேர்தல் அறிக்கையில் தெரிவிப்போம்.
கடந்த ஆட்சியில் கூட புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுவழங்கப்படவேண்டும் என்பது முதல் போரினால் பாதிக்கபட்ட எமது பகுதிகளை பொருளாதார ரீதியாக மீளகட்டி எழுப்பவேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.
அதில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த நெருக்கடியான காலப்பகுதிகளிலும் எமது மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி, எதிர்கால அரசியலை தீர்மானிப்பதில் பல புதிய அணுகுமுறைகளை கடைப்பிடித்துவருகின்றோம். அதனை மக்களுக்க நாம் அறிவிப்போம்.
இந்தநாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருந்தது என்பதை பற்றி குறிப்பிட விரும்பாத மனநிலையில் புதிய ஜனாதிபதி இருக்கும் நிலையிலும் அவர்களோடும் நாம் பேசவேண்டிய தந்திரோபாயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்.
தேர்தல் முடிந்த பின்னர் ஏனைய புலம்பெயர் அமைப்புகளோடும் கட்சிகளோடும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானங்களை எடுப்போம்” என்றார்.