கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றினை பிரசுரித்தமைக்கு எதிராக யாழிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் சார்பில் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இரு பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்து 45 நிமிடங்களிற்கு மேல் தனது வாதத்தினை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.
முதல் ஆட்சேபனை 04.12.2020இல் பொலிசார் தாக்கல் செய்த முதல் அறிக்கை குற்றவியல் சட்டக் கோவைக்கு முறனாக அமைந்தது என்றும், பிணை வழங்கப் பட முடியாத இனங்களிக்கு இடையில் முறன்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் உடனடியாக பொலிஸ் பெறுப்பதிகாரி அதிகாரமளிக்கப் பட்ட நீதவான் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லை எனில் சட்டப்பிரிவு குற்றவியல் சட்டக்கோவை 109, 05ம் உப பிரின் படி நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அல்லது தனது மேல் அதிகாரிக்கு இவ் விடயத்தை கொண்டு செல்லவேண்டும் ஆனால் இவ் வழக்கில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காமல் உயரதிகாரிக்கும் விடயத்தை தெரியப்படுத்தாமல் உரிய நடைமுறையினை பின்பற்றாது சிறுகுற்றப்பிரிவு பொலிஸ் பிரிவில் இவ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாடு குற்றவியல் சட்டக் கோவை 113மற்றும் 115க்கு முறன்படுகிறது.
இரண்டாவது பூர்வாங்க ஆட்சேபனை எமது கட்சிக் காரரை முதலாது சந்தேக நபராக குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக தேச துரோக குற்றம் புரிந்தால் அந்த குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன்னர் விசாரணையை முடிவுறுத்தி சட்டமா அதிபருக்கு வழக்குக் கோவை அனுப்பப்பட வேண்டும்.
அந்த வழக்கு கோவையை சட்டமா அதிபர் பரிசீலனை செய்து அரசுக்கு எதிராக குற்றம் ஒன்று புரியப்பட்டுள்ளது என்று ஒரு முடிவை எடுத்து சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என பொலிசாருக்கு தண்டணைச் சட்டக் கோவை 127 கீழ் சட்டமா அதிபர் எழுத்த மூல அங்கிகாரத்தைக் வழங்கிய பின்னரே வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்,
ஆனால் இந்த நடைமுறை பின்பற்றபடாமை வழக்கிற்கு முரணாக இருந்தமையால் வழக்கை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தை முன்வைத்தார்.
மேலும் தனது வாதத்தில், பத்திரிகையில் வெளிவந்த விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் குறித்த பத்திரிகையில் மட்டுமல்ல தென்னிலங்கையில் உள்ள சிங்கள பத்திரிகைகள் உட்பட பல தமிழ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
இந்த ஊடகங்கள் வெளியிட்ட இந்த செய்தி அரசினால் வழங்கப் பட்ட தகவலை மக்களிற்கு கொண்ட சென்றது, இது தண்டனைச் சட்டக் கோவை 120ம் பிரிவின் கீழ் எந்த குற்றமும் புரிந்ததாக இல்லை என்பதுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கள் மற்றும் பத்திரிகை ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது, எனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக உதவி ஆசிரியருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என்பதை முன்வைத்தார்.
குறித்த பத்திரிகை நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்க நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் ஈ.சரவணபவன் மற்றும் செய்தி ஆசிரியரான டிலீப் அமுதன் ஆகியோரை சந்தேக நபர்களாக குறிப்பிட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பிரசுரமாகும் போது செய்தி ஆசிரியர் அன்றைய தினம் பணியில் இல்லை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த இருவரையும் சந்தேக நபர்களாக குறிப்பிட்டமை தவறு எனவும் சட்டமா அதிபரின் எழுத்துமூல அனுமதியின்றியும் வழக்கினைத் தொடர முடியாது எனவும் மன்றில் தங்களின் வாதத்தினை முன்வைத்தார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.
அத்துடன் குறித்த வழக்கினை தாக்கல் செய்த யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை (கடந்த வழக்கிலும் இவர் முன்னிலையாகவில்லை), மேலும் பத்திரிகைகள் தொடர்பான சட்ட விதிமுறைகள் எவையும் எழுத்துவடிவில் இல்லை போன்ற பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் நீதிமன்றில் தங்களின் வாதத்தினை முன்வைத்தனர்.
குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகிய கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளாகிய திருக்குமரன், ஆனோல்ட் பிரியந்தன், கணதீபன், ரிசிகேஷன், சலேசியஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.