விமான நிலையத்தை மீள திறப்பது குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

0

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீள திறக்கும் திகதியை தற்போதைய நிலையில் உறுதியாக குறிப்பிடமுடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்நிலையில், சுகாதார மற்றும் உலக சுகாதார தரப்பினரது பரிந்துரைகள் முழுமையாக பின்பற்றப்பட்டே விமான நிலையம் மீள திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் நாட்டுக்கு வருவதற்கும் , அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்கும் சுகாதார தரப்பினது ஆலோசனைகளுக்கு அமைய பல செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

காலவரையறையின்றி மூடப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இம்மாதம் திறப்பதற்கு எதிர்பார்த்திருந்தோம். இவ்விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சிலும், சிவில் விமான சேவைகள் பிரிவிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம்.

கொவிட்- 19 வைரஸ் பரவல் சமூக தொற்றாக பரவலடையும் அபாயகராமான கட்டத்தை நாம் கடந்துள்ளோம். ஆனால் சர்வதேச நாடுகள் ஏதும் இதுவரையில் கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.

சர்வதேச நாடுகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுகிறார்கள். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்ட நாடுகளில் வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் விமான நிலையத்தை எப்போது திறப்பது என உறுதியாக குறிப்பிட முடியாது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் துரிதமாக இடம் பெற்று வருகின்றன.

அடுத்த மாதத்தின் நடுப்பகுதியளவில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ( நாட்டுக்கு வர இணக்கம் தெரிவித்துள்ள) அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.