வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் கொலை செய்யப்பட்டவருக்கு நீதி வேண்டும்! சாணக்கியன்

0

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக அவரது  சுட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் வீட்டுக்குச் சென்று அவர்கள் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது நீதிக்காக போராடும் ஒரு அமைப்பு அந்த வகையில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் விடயத்தில் இராஜாங்க அமைச்சரும்  ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.  அந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நாங்கள் கேட்பது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இலங்கையிலேயே இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எமது கட்சியும் உறுதியாக இருக்கின்றது .

ஆகவே இந்த உயிர் இழந்தவருக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். குறித்த இளைஞனின் கொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.  ஆனால் உண்மை நிலை அறியப்படவேண்டும்.  உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இருக்கின்றோம் நான்கு  பேர் இருந்தாலும் எதற்காக செல்கின்ற இடமெல்லாம் 50 அறுபது பேரை கூட்டிச்செல்ல வேண்டும்.

இப்படியான செயற்பாடுகள் தான் இவ்வாறான கொலைச்சம்பவங்களுக்கான காரணமாக இருக்கின்றது . எமது மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.  மக்களிடம் செல்லும்போது நாங்கள் தனியாக செல்லலாம் ஆகவே இதுபோன்ற கொலைகள் இனி மாவட்டத்தில் இடம்பெறக்கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்