திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அவரது சகோதரன் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா, ஆலீம் வீதி, எம்.எப்.முகம்மது ஷான் கனி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
களியினால் கட்டப்பட்டிருந்த பழைய வீட்டை சிறுவன் தட்டிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து வீழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த மரணம் தொடர்பாக கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி கே.டி.நெஹ்மத்துல்லாஹ் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காயமடைந்த இரண்டு வயதுடைய எம்.எப்.எம்.அப்லத் என்ற சிறுவன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.