வீதிகளில் வீழ்ந்து உயிரிழந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை? – வெளியானது உண்மை

0

கொவிட் தொற்று காரணமாக வீதிகளில் பலர் உயிரிழப்பதாக கூறப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் இதுவரை 50தை தாண்டிய கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், ஒரேயொருவர் மாத்திரமே வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாசகர் ஒருவர் வீதியில் உயிரிழந்திருந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனைகளில் அவருக்கு கொவிட் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த யாசகரை தவிர வேறு எந்தவொரு நபரும் கொவிட் தொற்றினால் வீதிகளில் வீழ்ந்து உயிரிழக்கவில்லை என்பதனை அஜித் ரோஹண உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில், கொவிட் தொற்றினால் பலர் வீதிகளில் வீழ்ந்து உயிரிழப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

உண்மைக்கு புறம்பானது செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் இதற்கு முன்னர் சுமார் 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.