வீரசேகரவைக் கண்டுக்கொள்ளாத பவித்ரா, சாணக்கியனுக்கு உபதேசம்

0

முகக் கவசமணியாமல் தனக்கு மேலானா ஆசனத்தில் அமர்ந்திருந்த சரத் வீரசேகரவை எதுவும் கூறாத சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, முகக் கவசமணியாதிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நோக்கி, முகக்கவசம் அணிந்து உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றைய (18) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவுக்கான சந்தர்ப்பத்தில், சுகாதார அமைச்சரிடம் மேலதிகக் கேள்விகளை எழுப்பிய சாணக்கியன் எம்.பி, முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.

முதலில் முகக் கவசத்தை அணிந்து உரையாற்றுங்களென, சாணக்கியனிடம் பவித்ரா கடுந்தொனியில் கூறியதால், ஆளுங்கட்சி எம்.பிகள் அனைவரும் சிரித்தனர். முகக்கவசத்தை அணியாதிருந்த சரத் வீரசேகரவும் சிரித்தப்படியே பவித்ராவின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது பதிலடி வழங்கிய சாணக்கியன், முகக்கவசம் அணிவது அனைவரதும் பொறுப்பெனக் கூறி முகக் கவசத்தை அணிந்துக்கொண்டதோடு, “உங்களுக்கு (பவித்ரா) மேலுள்ள ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சரத் வீரசேகவும் முகக்கவசம் அணியவில்லை. எனக்கு மாத்திரம் கூறாது, சரத் வீரசேகரவுக்கும் கூறுங்கள்” என, பவித்ராவுக்குப் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அவசர அவசரமாக தனது சட்டையின் மேல் பாக்கெட்டில் வைத்திருந்த முகக் கவசத்தை எடுத்து அணிந்துக்கொண்டார்.