வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம் – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!

0

ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது.

இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து நிறுத்த கோரி தொல்லியல் திணைக்களத்தினால் நெடுங்கேணி பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகத்தினரை நேற்று மாலை அழைத்த பொலிஸார் தொல்லியல் திணைக்களம் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தனர்.

அது முற்று முழுதாக சிங்கள மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் முழுமையாக என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியவில்லை.

குறித்த கடிதத்தை காண்பித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் சில விடயங்களை குறிப்பிட்டு தொல்லியல் சார்ந்த இடங்களை சிரமதானம் செய்ய முடியாது எனவும், அது தொல்லியலுக்குறிய இடம் அங்கு செல்வதோ திருவிழா செய்வதோ தடை செய்யுமாறு குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக எமக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த ஆலய நிர்வாகத்தினர் எமக்கான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. எம்மை ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டதோடு அபிவிருத்திகளை மாத்திரமே செய்ய முடியாது என குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தோம்.

இதனை ஏற்கமறுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி தொல்லியல் கூறிய கூற்றுக்கு இணங்கியே செயற்பட முடியும் என்றும் இன்று நீதிமன்றிற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.