வெட்டுக் காயங்களுக்கு உள்ளான 6 மாதக் குழந்தை உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்

0

திருகோணமலை- கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கப்பல்துறையில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உட்பட மூவர்,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் வாளால் வெட்டிய சந்தேகநபரின் குழந்தை உட்பட மாமியார் (வயது 43), மாமனார் ஆகியோரே வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் சந்தேகநபருடைய மாமியாரின் துண்டிக்கப்பட்ட கையினை பொலிஸார்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். ஆனாலும் அந்த கையை சத்திரசிகிச்சை ஊடாக பொருத்த முடியாமல் போயுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த சம்பவத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின்  சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை தேடும் தீவிர பணியினை  சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.