வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 76 பேர் 14 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியேறத்தடை!

0

ஹட்டன் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுற்றுலா பேருந்துகள் மற்றும் வான்கள் ஹட்டன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அம்பகமுவ பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரி கிரிஷான் பிரேமசிறி,

“’கொவிட் – 19′ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து வந்து பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள 76 பேரை அவர்களின் வீடுகளில் பாதுகாப்பான முறையில் தனிமையாக இருக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏனைய நாடுகளில் இருந்து அண்மையகாலப்பகுதிகளில் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகைதந்துள்ள 76 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகளால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை அவர்கள் பின்பற்றவில்லை. 76 பேரில் 70 வீதமானோர் பெண்களாவர்.

ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி, நோட்டன் பிரிட்ஜ், வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் – 19 பரவக்கூடிய பகுதியாக நுவரெலியா மாவட்டமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைரஸால் எவராவது பீடிக்கப்பட்டால் அவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன“ எனத் தெரிவித்துள்ளார்.