வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கையின் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கும் தேர்தல் சீர்த்திருத்தங்களை தேசிய தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய மற்றும் ஆணையகத்தின் ஏனைய உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல் தேர்தல் திருத்தங்களை உள்ளடக்கிய தேசிய தேர்தல் ஆணையகத்தின் செயல் திட்டத்தை மையமாகக் கொண்டிருந்தது.
2020-2024க்கான தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் செயல் திட்டத்தின் முக்கிய அங்கமாக தேர்தல் சீர்த்திருத்தங்கள் உள்ளன என்று தேசபிரிய கலந்துரையாடலின் போது பிரதமரிடம் கூறியுள்ளார்.
தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்த பண வைப்புக்கான(கட்டுப்பணம்) திருத்தங்கள்,தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாவிட்டால் வாக்காளர்களுக்கு ஒரு நாள் முன்னதாக வாக்களிக்க அனுமதித்தல், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க அனுமதித்தல் மற்றும் பிரச்சார செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட சில திருத்தங்களாக இருந்தன.
இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை வாக்களிக்க அனுமதிக்கும் யோசனை உட்பட தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆய்வு செய்ய தாம் தெரிவுக்குழு ஒன்றை நிறுவ பரிந்துரை செய்யப்போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடலின் போது உறுதியளித்துள்ளார்.