‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

0

‘வெளிநாட்டவர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக சில சுற்றுலா ஸ்தாபனங்கள் பின்பற்றும் பாரபட்சமான நடைமுறைகள் தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் “எங்கள் அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமையை வழங்குகிறது. அங்கு எந்தவொரு நபரும், இனம், மதம், மொழி, சாதி, பாலினம் அல்லது அத்தகைய அடிப்படையில் எந்தவொரு இயலாமை, பொறுப்பு, கட்டுப்பாடு அல்லது அணுகல் தொடர்பான நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படக்கூடாது.

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கடினமான காலங்களில் சுற்றுலாத் துறைக்கு ஆதரவாக நின்றனர். எங்கள் தொழில்துறையை முழுவதுமாக ஆதரித்தவர்கள் எங்கள் குடிமக்கள் தான். அதற்காக, தொழில் பங்குதாரர்களாகிய நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், உள்நாட்டுப் பயணிகளும் சுற்றுலாச் சொத்துக்கள் நன்கு பராமரிக்கப்படுவதையும் ஹோட்டல்களின் தேவைகளைப் பின்பற்றுவதையும் தொழில் மற்றும் நாட்டிற்கான பிராண்ட் தூதுவர்களாக இருப்பதையும் உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு முக்கியமான தொழில் துறையை மீட்டெடுக்கவும், செழிக்கவும் உதவுவது நமது கடமையாகும்.

சுற்றுலா ஸ்தாபனங்கள் சொத்துக்களைப் பராமரிக்காத அல்லது நிறுவனங்களின் கூறப்பட்ட தேவைகளுக்கு இணங்காத அத்தகைய விருந்தினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம். அத்தோடு, அத்தகைய விருந்தினர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அறிக்கையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.