வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

0

இலங்கைக்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம் 2021 நவம்பரில் மேலும் குறைந்துள்ளது.

நவம்பர் 2021 இல் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2020 நவம்பரில் பெறப்பட்ட பணப்பரிமாற்றத்தின் 611.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 55.6% குறைவு ஆகும்.

2021 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் பெறப்பட்ட பணப்பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு 5,166.3 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது, இது 2020ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 6,291.2 மில்லியன் டொலரிலிருந்து 17.9 வீதம் குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அக்டோபர் 2021 இல் 317.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது, 2020 அக்டோபரில் 630.7 மில்லியன் டொலரில் இருந்து 49.6 வீதம் குறைந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு உத்தியோகபூர்வ வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.