வெளிநாட்டு யுவதி கொழும்பில் தற்கொலை – கிழக்கின் முன்னாள் அரசியல்வாதியின் மகனிடம் விசாரணை?

0

வெளிநாட்டு யுவதியொருவர் கொழும்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிழக்கின் முன்னாள் அரசியல்வாதியொருவரின் மகனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

சுற்றுலா விசா மூலம் நேபாளத்தில் இருந்து வருகை தந்து, களியாட்ட விடுதியில் பணியாற்றி வந்த யுவதி ஒருவர் அண்மையில் கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனை அவர் காதலித்து வந்ததாகவும், குறித்த நபர் இந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துப்படுத்திய முன்னாள் அமைச்சரின், மகன் ஒருவரே குறித்த பெண் பணியாற்றிய களியாட்ட விடுதிக்கும் அவர் தங்கியிருந்த வீட்டுக்கும் அவ்வப்போது சென்று வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையை தொடர்ந்து அந்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.