வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

0

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது.

தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார்.

ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே,

‘நாட்டில் கொரோனா 4ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம். ஆனால் இந்த புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகின்றது.

கெளடெங் போன்ற மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த மாகாணங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தாலும், அது டெல்டா வைரஸின் பிரிவுதான் என்பதால் அதை கட்டுப்படுத்திவிடலாம் என ஆரம்பத்தில் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால் இப்போது உருமாறிய புதிய வகை வைரஸ் பரவுவதை தெளிவாக அடையாளம் கண்டுவிட்டோம். நாம் எதிா்கொள்ளும் கண்ணுக்குப் புலனாகாத எதிரியை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சிரமம்.

பொருளாதார மையமான கெளடெங் நோக்கி தென்னாப்பிரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனா். ஆகையால் அடுத்த சில நாள்களில் நோய்த்தொற்றுப் பரவலின் வீதம் அதிகரிக்க தொடங்கலாம்.

தென்னாப்பிரிக்க அரசும், கொரோனா கட்டுப்பாட்டு சபையும் வார இறுதி நாள்களில் சந்தித்து, உருமாறிய வைரஸின் உட்கூறுகள் குறித்தும், நோய்த்தொற்றுப் பரவல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்நாட்டின் குவாசுலு நடால் ஆராய்ச்சி மற்றும் வகைப்படுத்துதல் மைய (கேஆா்ஐஎஸ்பி) இயக்குநா் பேராசிரியா் டுலியோ டி ஒலிவெய்ரா கூறுகையில், ‘‘ இன்று உலக சுகாதார அமைப்பின் பணிக்குழுவுடன் அமா்ந்து இந்த புதிய வகை வைரஸூக்கு கிரேக்க பெயரிடுவது குறித்து ஆலோசனை நடத்துவோம்.

தென்னாப்பிரிக்காவில் வெகு விரைவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டுவிட்டதால், இதன் தோற்றம் தென்னாப்பிரிக்காதான் என தீா்மானித்துவிட முடியாது.

கொரோனா வைரஸின் மரபணுவில் 30 இற்கும் மேற்பட்ட பிவுகள் காணப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பிவுகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.