அனைத்து தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இணக்கம்!

0

அனைத்து தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

திறன் விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணியிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்  போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் துறையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது கொரோனா தடுப்பு முறைமைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து  தனியார் துறையினரதும் தொழில் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினது கொள்கையாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எந்தவொரு தனியார் துறையினரினதும் தொழில்கள் பறிக்கப்படக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறிப்பாக சமூக இடைவெளியை பேணும் அதேவேளையில் சேவை மாற்றத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேவை காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் (வீட்டில் இருக்கும் காலத்தில்) சம்பளத்தையும் வழங்கவும் சலுத்தவும், அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாயினை விட அதிகரித்த தொகையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை முறையாக செலுத்தவும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஜூன் மாத இறுதிக்குள் இந்த குழு மீண்டும் கூடி அப்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்யும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.