அமெரிக்க இலங்கை ஒப்பந்த விவகாரம்! இரகசியமாக வைத்திருந்த அறிக்கை வெளியே கசிந்தது எப்படி?

0

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமெரிக்க நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையின் பிரதி அவருக்கு கிடைத்த விதத்தை அரசாங்கத் தரப்பினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தப்பட்ட இந்த உடன்படிக்கையின் பிரதி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சியின் அந்த சிரேஷ்ட உறுப்பினரின் கைகளுக்கு இந்த உடன்படிக்கை கிடைத்த விதத்தையும் அரசாங்கம் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேச தரப்புடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளவர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படி இருந்த போதிலும் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

அத்துடன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கும் இந்த உடன்படிக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் அண்மையில்  நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, அந்த உடன்படிக்கையின் பிரதி எனக் கூறி உடன்படிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அனுரகுமார, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த உடன்படிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பில் இருந்து எந்த எதிர்ப்போ, மறுப்போ முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.