” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பவர்களை மௌனிக்க வைப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” இவ்வாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வெள்ளை வேனில் வந்த சிலர், சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க என்ற இளைஞரை பலவந்தமாக தூக்கிச்செல்லும் காட்சியை ஊடகங்கள் வாயிலாக காணமுடிந்தது.
அவர் இது தொடர்பில் நேரலையை காண்பித்திருக்காவிட்டால் இந்நேரம் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் போய் இருக்கும்.
நபர்களை பொலிஸார் கைது செய்ய வேண்டுமானால் அதற்கென நாகரீகமான நடைமுறைகள் உள்ளன. பொலிஸ் சீருடையில் வரவேண்டும். பொலிஸ் ஜீப் இருக்க வேண்டும்.
அதேபோல குற்றம் என்ன என்பது பற்றி சம்பந்தப்பட்டவருக்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஷெயான் மாலக்க விடயத்தில் இது எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கடத்தல் பாணியிலேயே கைது இடம்பெற்றுள்ளது. ஜனநாயக சமூகத்துக்கு இது பொருத்தமற்ற செயற்பாடாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம்.
ஜெனிவாத் தொடரில் அரசு நிவாரணத்தை எதிர்ப்பார்க்கின்றது. எனவே, மூளை உள்ள எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் சுதந்திரமாக உலாவருகின்றனர். ஆனால் நீதிக்காக குரல் எழுப்புபவர்களை மௌளிக்க வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இயலாமல் உள்ள சட்டமா அதிபர், அரசியல் வாதிகளின் தேவைக்கேற்ப செயற்படக்கூடாது.
அரசின் சூழ்ச்சிகள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். அவற்றை அவதானித்து தேவையான சந்தர்ப்பத்தில் சிறந்த பதிலை கொடுக்க வேண்டும்” – என்றார்.