அரச குடும்பத்தினையும் விட்டு வைக்காத கொரோனா!

0

முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் அரச குடும்பங்களையும் விட்டுவிடவில்லை.

அந்த வகையில், ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மிக்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் 86 வயதான அந்நாட்டு இளவரசி மரியா தெரசா, பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸூக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.