அரச வைத்தியசாலைகளில் மாதாந்த பரிசோதனைக்கு செல்வோருக்கான அறிவிப்பு!

0

அரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic)  பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள முடியாத நோயாளிகளின் வசதிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் தபால் துறை இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன.

அதன்படி, அரச வைத்தியசாலைகளில் மாதாந்த பரிசோதனைகளுக்காக பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை தனித்தனி பார்சல்களில் விநியோகித்து தபால் துறை மூலம் அவர்களின் வீடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட நேரத்தில் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட முகவரிக்கு இந்த மருந்துகள் விநியோகிக்கப்படுவதால், பதிவு செய்யும் போது கொடுக்கப்பட்ட முகவரி மாற்றப்பட்டால், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் நோயாளிகளுக்கு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை 072 0 720 720 அல்லது 072 0 606 060 என்ற இலக்கங்களைத் தொடர்புகொண்டு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.