இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு!

0

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையானது சீனாவின் மாகாணம் போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளது.

வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக இந்தியாவின் பாதுகாப்பினை அதுபாதிக்கும் என்னும் வகையில் நேரடியாக இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே இந்த அரசாங்கம் ஏற்படுத்திவருகின்றது.

கொரோனா காரணமாக இந்த நாட்டின் நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கின்றது. தொற்று நோய்க்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஒரு அறிக்கை விடுகின்றார்.

கொரோனா செயலணிக்கான பொறுப்பான இராணுவத்தளபதி சவேந்திரா சில்வா வேறுவிதமான அறிக்கை விடுகின்றார். சுகாதார அமைச்சர் இன்னுமொரு அறிக்கை விடுகின்றார். நாட்டு மக்கள் தற்போதைய நிலையில் குழப்பான நிலையிலிலுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளேயின் அறிக்கையின்படி அல்பா, டெல்டா சில வாரங்களில் பரவி ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலையேற்படும் என்று கூறுகின்றார்.

முதலாம் இரண்டாம் அலையினை ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தி கொரோனா தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தினார்கள். மூன்றாவது அலையில் பயணக்கட்டுப்பாடு என்று கூறி ஒரு நகைச்சுவையான நாடகம் நடைபெற்று வருகின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.