இன்று முதல் பள்ளிவாசல்களை திறக்க தீர்மானம்!

0

பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனையினைத் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிவாசல்களை திறக்க முடியும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய சகல மத வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டில் கொராேனா தொற்றின் தாக்கம் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதனால் வணக்கஸ்தலங்களை இன்று முதல் திறப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்களையும் இன்று முதல் திறப்பதற்கு வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் வணக்கஸ்தலங்களை மீண்டும் திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் பள்ளிவாசல்களை திறக்கும்போது பின்பற்றவேண்டிய நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை வக்புசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அனுப்பியுள்ளது.

குறிப்பாக பள்ளிவாசல்களை வழிபாட்டுக்காக திறப்பதற்கு முன்னர் பிரதேச பொது சுகாதார அதிகாரியினால் பரிசோதித்து, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அத்துடன் பள்ளிவாசலுக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கே அனுமதி வழங்கப்பட வேண்டும். சுகாதார பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படுமாறு அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.