இம்முறை தமிழில் தேசிய கீதத்தை இசைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை!

0

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த கட்சி கடிதம் அனுப்பியுள்ளதுடன் தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான சமன்குமார் கூறுகையில், “இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். எவ்வாறாயினும் அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே, எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதத்தைப் பாடி அரசாங்கத்தின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையை வெளிப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டு பிரஜைகள் என்பதுடன் அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. எனவே, இந்த மக்களைத் தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்படாது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு எதிர்வரும் சுதந்திர தினம் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகவே எமது கட்சி பார்க்கின்றது.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தை இந்த விடயத்தில் வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையானது தமிழ் பேசும் சமூகத்தின் அனைவரதும் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

அதேபோன்று, தமிழ் சமூகத்திலும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். பெப்ரவரி நான்காம் திகதி உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்திருக்கும் சுதந்திர நிகழ்வுகளில் தமிழிலேயே தேசிய கீதத்தைப் பாடி உரிமையை பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.