இறுதிப் போரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட சஜின் வாஸ்!

0

இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டதும் உண்மை என மகிந்தவின் சகா சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் படையினரின் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு தெரிவித்திருந்ததை அவரது அமைச்சரவையில் முக்கிய பதவி வகித்த சஜின் வாஸ் குணவர்த்தன அடியோடு நிராகரித்துள்ளார்.

“இறுதிப்போரில் படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமன்றி பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற கருத்தை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ளவே மாட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை, தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமே கொல்லப்பட்டார்கள் என அரசு தெரிவித்து வருகின்றது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?’ என்று ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இறுதிப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகள், பொதுமக்கள் மற்றும் படையினர் என மூன்று தரப்பிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. பலர் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கோனோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எடுத்துக்கொண்டால் மூன்று தரப்பிலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களே பெருமளவில் காணாமல்போயுள்ளனர்.
பொதுமக்கள் யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை என்னால் கூற முடியாது. ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களில் ஒரு பிரிவினர் இராணுவத்தினர் வந்து தமது உறவுகளைப் பிடித்துச் சென்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பிரிவினர் தமிழீழ விடுதலைப்புலிகள் வந்து பிடித்துச் சென்றனர் எனக் கூறியுள்ளனர். மற்றொரு பிரிவினர் யார் பிடித்துச் சென்றனர் என்பதே தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதிப்போரில் படுகொலைகளும், காணாமல்போன சம்பவங்களும் இடம்பெற்றமையால்தான் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் இலங்கை சந்தித்துள்ளது” – என்றார்.