இலங்கைக்கு பாராட்டு தெரிவித்தது UNICEF!

0

சிறார்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததனூடாக, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையும் 16 ஆக அமையும் என UNICEF நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனூடாக கட்டாயக் கல்வி தொடர்பில் சிறார்களுக்கு காணப்படும் உரிமையை அர்த்தமுள்ளதாக்க முடியும் எனவும் UNICEF தெரிவித்துள்ளது.

சிறார்கள் மற்றும் இளையோர் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் இளம் குற்றவாளிகள் தொடர்பான கட்டளைச் சட்டங்களை திருத்துவதனூடாக சிறுவர்கள் சிறைச்சாலைக்கு செல்வதைத் தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களத்தினூடாக சிறுவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க முடியும் எனும் தீர்மானத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் UNICEF தெரிவித்துள்ளது.