நாடு திரும்புவதற்குத் தயாராகவுள்ள இலங்கையர்கள் அனைவரையும் ஒரே தடவையில் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை கட்டம் கட்டமாக நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் ஒரே தடவையில் அழைத்துவர முடியாது. ஏனெனில் போதியளவில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் எம்மிடம் இல்லை. தற்போது இராணுவத்தினரே தனிமைப்படுத்தல் நிலையங்களை முகாமைத்துவம் செய்கின்றனர்.
ஏனெனில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சிறிய தவறு ஏற்பட்டாலும் மீண்டும் சமூகப் பரவல் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி கொரோனா வைரஸ் சுவாசம் மூலமும் பரவலாம் என்றும், எனவே இந்த விடயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் , வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வருவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்” என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.