இலங்கையில் அடுத்த சில வாரங்களில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) எச்சரித்துள்ளார்.
வர்த்தகர்கள் இறக்குமதி செலவீனங்களை செலுத்துவதற்கான அமெரிக்க டொலர்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய அவர்,
உலக சந்தை விலைகளும் அதிகரித்துள்ளமை காரணமாக பால் உணவு, உள்நாட்டு எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
உலக சந்தையில் விலை உயரும் போது அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கடியை, இலங்கை எதிர்கொள்ளும் உண்மையை மறைக்க முடியாது. அத்துடன் இனி எந்த நிவாரணங்களையும் வழங்க முடியாது, என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஒரு முடிவை அறிவிப்பதற்கு முன்னர், விலை உயர்வு பற்றிய விடயம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் மெய்நிகர் சந்திப்புக்கு அழைக்கப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு விலை உயர்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.