இலங்கையில் பயணக்கட்டுப்பாடு மேலும் சில நாட்களுக்கு நீடிப்பு!

0

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்கு 3 நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

இதேநேரம், நாளை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படவில்லை என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டும் பயணக்கட்டுப்பாடுகள் நாளை இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அதன்பின்னர், எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதோடு, அன்று இரவு 11 மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

அதன் பின்னர் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதோடு, அன்று இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் 7ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 25, 31 மற்றும் 4ஆம் திகதிகளில் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், அன்றைய தினம் மாத்திரம் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.