இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்ப இந்தியா தீர்மானம்?

0

இலங்கை உள்ளிட்ட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வுகூடங்களை அமைப்பதற்காகவும், உள்ளுர் நிபுணர்களிற்கு கொரோனா வைரசினை எதிர்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் கடந்த மாதம் இந்தியா 14 பேர் கொண்ட இராணுவ குழுவை இந்தியா அங்கு அனுப்பியுள்ளது.

இதேபோன்று இந்தியா குவைத்திற்கும் 15 பேர் கொண்ட இந்திய இராணுவ குழுவொன்றை அனுப்பிவைத்துள்ளது.

மேலும், பிராந்தியத்தில் உள்ள நேசநாடுகள் கொரோனா வைரசினை எதிர்த்து போராடுவதற்கு உதவும் இந்தியாவின் நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிற்கு இந்திய இராணுவத்தின் தனித்தனி குழுக்களை அனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.

சார்க் நாடுகள் கொரோனாவை எதிர்த்துப்போராடுவதற்கான பொதுவான கட்டமைப்பின் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகின்றது.

மார்ச் மாதம் இந்திய பிரதமர் சார்க் பிராந்தியத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கான பொதுவான தந்திரோபாயத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

அத்தோடு, கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்காக அவசர நிதியமொன்றை உருவாக்கும் யோசனையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.