இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! வழமைக்கு திரும்பும் மின்சார விநியோகம்

0

நாடாளவிய ரீதியில் பகுதியளவில் துண்டிக்கப்பட்டு வந்த மின்சார விநியோகம் நாளை முதல் வழமைக்கு திரும்புவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொடர்ச்சியாக நான்கு தினங்களாக அமுல்படுத்தப்பட்ட தினமும் ஒரு மணி நேர மின்வெட்டு நாளை முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் நாடு தழுவிய ரீதியில் மின்சார விநியோகமானது தடைப்பட்டது. நீண்ட நேரத்தின் பின்னர் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டது.

எனினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான மின் இணைப்பின் பரிமாற்றத்தை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

விசையாழிகள் குளிர்ச்சியடையும் வரை மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் அதன்போது சுட்க்காட்டியிருந்தார்.

இதனால் இலங்கை மின்சார சபைக்கு தேவையான மின் அளவு கிடைக்காதமையினால் கடந்த செவ்வாயக்கிழமை முதல் இன்று வரை நான்கு கட்டங்களின் கீழ் மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முக்கிய எரிசக்தி ஜெனரேட்டர்கள் இன்று முதல் தேசிய மின் கட்டத்தில் சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக மின்சார விநியோகமானது நாளை முதல் வழமைபோல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.