ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையா ளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இலங்கை மீதான இந்த குற்றச்சாட்டுகள், எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளன. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, இலங்கையின் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து வெளிநாட்டமைச்சின் அதிகாரிகள், அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களை ஜெனீவாவுக்கு அனுப்பி யுள்ளனர்.
கடந்த ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியதை ஐ.நா. ஆணையாளரின் அந்த அறிக்கை விரிவாக ஆராய்ந்துள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட் டுள்ள திருத்தங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் பேரவை மகிழ்ச்சியடையவில்லையென தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
பொலிஸாரினால் தடுத்துவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுவதும் சட்டவிரோத படுகொலை களும் அதிகரித்துள்ளன. நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உரிய திட்டங்கள் இல்லை என தெரிவித்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை.
அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக இல்லை .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 17 பக்க அறிக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசியம் குறித்து அதிகளவு வலியுறுத்தியுள்ளது.
பொலிஸாரினால் தடுத்துவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுவதும் சட்டவிரோத படுகொ லைகளும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான முறையான நம்பகரமான புதிய திட்டமொன்றை இலங்கை உருவாக்கவில்லை .
கடந்த வருடம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை இராணுவமயப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. சுயாதீன ஊடகங்கள் உட்பட சிவில் சமூகத்தினர் செயற்படுவதற்கான தளத்தை மேலும் அதிகரிக்கவேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் குறித்து அதிருப்தியையும் ஆணையாளர் முன்வைத்துள்ளார். இச்சட்டம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த திருத்தங்கள் அதில் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக் குழு கடந்த 8ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் கூடிய போது இதற்கான குறிப்பு வெளிப்பட்டது.
இதனைவிட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தின படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சியின் விளைவாக, இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை விடுத்துள்ளமை சட்டமா அதிபர் குறித்த விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அவர்கள் மீது 855 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் பதிவு செய்தார். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 49ஆவது அமர்வில், இலங்கை விவகாரம் குறித்த வாக்கெடுப்பு இடம்பெறாது. எனினும், இந்த ஆண்டு செப்டெம்பரில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானத்துக்கு முன்னோடியாக இந்த அமர்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.