ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத விடயங்கள்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எமது உபகுழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறான குறைபாடுகளை கண்டறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமாஅதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சிபாரிசுகள் அடங்கிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்தார்.

கிழக்கில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு எல்.ரீ.ரீ.ஈ காரணமென குற்றம் சாட்டப்பட்டது.

உண்மையை மூடி மறைப்பதற்காக எல்.ரீ.ரீ.ஈ பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளமை பின்னர் தெரிய வந்துள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் சஹ்ரானுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என தெரிய வந்ததது இதனால் இவ்வாறான சம்பவம் குறித்தும் விசாரனை செய்யப்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கருதப்படும் பல தகவல்கள் அடங்கியுள்ளன.

ஆனால் ஆளும் தரப்பினரும் அந்த காலப்பகுதியில் இது குறித்து என்ன செய்தனர். உரிய பாதுகாப்பு பிரிவும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை.

இந்த தகவல்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். இவரது கருத்துக்கு எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 

2012 ஆம் ஆண்டு மாவனெல்லை சம்பவத்திற்கு பின்னர் கேகாலை உதவி பொலிஸ் அதிகாரி கமல் பெரேரா சிலரை கைது செய்திருந்தார். ஆனால் அவர்கள் சிலரின் அழுத்தத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .இந்த பொலிஸ் அதிகாரி இந்த கைதி தொடர்பாக நீதிமன்ற டீ அறிக்கையையும் தயார் செய்திருந்தார்.இது தடுக்கப்பட்டத ஏன் இதுவும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 

ஏப்ரல் குண்டு வெடிப்புடன் தொடர்புபட்டதாக கருதப்பட்ட இருவர் வனாத்தவில்லில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தனர். உண்மையான காரணங்களை மறைத்து இது தொடர்பான அறிக்கைகயை அப்போதைய ஜனாதிபதிக்கு அதிகாரி வழங்கியுள்ளாரா? இது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். 

ஜிந்தொட்டவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தெற்கு அரசியல்வாதி தலையீடுகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக சஹ்ரான் தனது முகப்புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தார். காத்தான்குடியில் இடம்பெற்ற மத சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. காத்தான்குடியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கைக்கு என்ன நடந்தது. இதற்கு காரணமான அதிகாரி யார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை உப குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.