எதிர்வரும் வாரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கிராம சேவையாளர் பிரிவு மட்டத்தில் சமூகங்களை தனிமைப்படுத்தும் தற்போதைய நடைமுறை, பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாக்கவோ அல்லது கோவிட் பரவுவதை கட்டுப்படுத்தவோ மாட்டாது என்று ஏ.எம்.எஸ் என்ற மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் மாவட்ட மட்டத்திலாவது ஆக்கபூர்வமான முடக்கலை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரியிருக்கிறது .

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்குமார் பெர்னாண்டோ, இலங்கையின் கோவிட் கட்டுப்பாட்டு மூலோபாயம், கட்டுப்பாட்டுக்குள் மீறுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

ஜெனீவாவில் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பால் செய்யப்பட்ட பூர்வாங்க முன்கணிப்பின் படி, நோய் கோவிட் தொற்றின் தற்போதைய போக்கு தொடரும் என்ற அனுமானத்தில், இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தினமும் 10,000 தொற்றாளர்கள் பதிவு செய்யப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நடந்தால் இறப்புகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 100 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

நோய் கட்டுப்பாட்டை மீறி நாடு இந்த ‘முனைப்புள்ளியை’ அடைந்தால், அந்த இடத்திலிருந்து மீள்வது மிகவும் கடினம் என்று பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை குறைந்தது 65-70% மக்களை இரண்டு அளவுகளுடன் பாதுகாக்க பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை விரைவாக அணுக வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.