எமது மக்கள் மீதான அரசின் அடக்குமுறை எண்ணம் ஒருபோதும் ஈடேறாது – ரவிகரன்!

0

சுகாதாரச் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ, கோரிக்கைகள் தொடர்பிலோ கவனம் செலுத்தாத அரசாங்கம், அந்தச்சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன்  தெரிவித்துள்ளார்.

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்குப் பதிலாக இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட  மருத்துவமனையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்களின் அறவழிப் போராட்டத்தினை மதிக்காமல், படைத்துறையின் வலு கொண்டு எதிர்கொள்ளும் போக்கை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

சுகாதார சிற்றூழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பிலே, அந்த சிற்றூழியர்களின் கருத்துக்களை கேட்காமல் உடனடியாகவே சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினை அந்த பணிகளுக்காக ஈடுபடுத்துவதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

நிச்சயமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார சிற்றூழியர்களின் கோரிக்கை என்ன என்பதை உரியவர்கள் உடனடியாக கேட்டிருக்கவேண்டும்.

அவ்வாறு அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு, அவர்ளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அதுவே முறையான செயற்பாடாகும்.

அந்தச் சிற்றூழியர்களின் கோரிக்கை என்ன? நான் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுடன் கலந்துரையாடியவகையில், ஏற்கனவே யுத்த காலப்பகுதியில் தங்களுடன் பணியாற்றிய பலரும், வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற கருத்தினைச் சொல்லியிருக்கின்றனர். அக்கருத்து உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.

தற்போது ஒருலட்சம் வேலைவாய்ப்பினூடாக சிற்றூழியர்களுக்கு வழங்கப்படும் நியமனங்கள், ஒவ்வொரு அமைச்சர்கள் ஊடாகவும், அல்லது அரசாங்கத்தின் சார்பாளர்களூடாகவும் அந்த வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தினதும், அரசாங்கத்தை சார்ந்துள்ளோரினதும் இத்தகைய செயற்பாட்டையும் அந்த சிற்றூழியர்கள் எதிர்க்கின்றனர்.

இவ்வாறாக சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுக்குப் பதிலாக இராணுவத்தினர் அங்கு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சேவைகளைப் பெறுவதற்காகச் செல்லும் மக்கள் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், பயத்தின் காரணமாக வைத்திய சேவைகளைப் பெறாது பலர் திரும்பிசெல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கும் சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் எனில், இங்கு ஒரு இராணுவ ஆட்சி நடைபெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்களுடைய எழுச்சிப் போராட்டத்தின்போது பாதுகாப்புத் தரப்பினர் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைளைப் பிரயோகித்திருந்தனர்.

அப் போராட்டத்தின் பின்னர் நீதிமன்றக் கட்டளைகளை மீறியதாக, போராட்டத்திலே கலந்துகொண்டவர்கள் பலரும் பொலிஸாரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இப்படியாக பாதுகாப்புத் தரப்பின்மூலமாக பலவழிகளிலும் எமது மக்களை அடக்கிவிடலாம், எமது மக்களின் கோரிக்கைகளை ஒடுக்கிவிடலாம் என்ற எண்ணத்துடன் தற்போதை  அரசாங்கம் செயற்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும் எமது மக்களை பாதுகாப்புத் தரப்பினரைக்கொண்டு அடக்கிவிடலாம் என்ற அரசாங்கத்தின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.

எமது மக்கள் மீது அரசு அடக்குமுறைகளை திணிக்கும்போது, எமது மக்கள் வீறுகொண்டு எழுவார்களே தவிர, மாறாக எமது மக்கள் மீதான அரசின் அடக்குமுறை எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.