ஐ.நா. உயர் அதிகாரிகள் ஜனவரியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்!

0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாடுகளிடம் மண்டியிடவேண்டாம் என எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

நாம் ஒருபோதும் மண்டியிடமாட்டோம். நாட்டின் தன்மானத்தை – கௌரவத்தை பாதுகாத்துக்கொண்டுதான் வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்திவருகின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஆரம்பம் முதல் இலங்கை அங்கம் வகிக்கின்றது. ஐ.நாவுடன் நாம் தொடர்ச்சியாக தகவல்களை பரிமாற்றிவருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் நாட்டுக்கு வருகின்றனர். ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்லலாம். எம்முடன் பேச்சுகளை நடத்தலாம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் ஆணையாளரை நாம் ஏற்கின்றோம். ஆனால் திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையை இலக்குவைத்து, சாட்சியங்களைத் திரட்டி, சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கான விசேட பொறிமுறையை ஏற்கமாட்டோம். சரியான விடயங்களை ஏற்போம். அதற்காக எல்லா விடயங்களுக்கு தலைசாய்க்க முடியாது.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நாம் முழுமையாக மீளப்பெறமாட்டோம். 42 வருடங்கள் பழமையான அந்த சட்டம் மறுசீரமைக்கப்படும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.