ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்களா?

0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டினால் இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எழுத்துமூல சமர்ப்பணம் முன்வைக்கப்படவுள்ளதுடன், மார்ச் 03 ஆம் திகதி இலங்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றுவது தொடர்பில் இன்னமும் முடிவு எட்டப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவை தொடர்பில் செய்ய வேண்டிய விடயங்களை செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கூற வேண்டிய கருத்துக்களை கூறவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

மக்களின் உண்யைான நிலைப்பாடுகளை அறிவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு மனித உரிமைகள் நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்துவதற்கு எழுத்து மூலமான அறிக்கை ஒன்றை அனுப்பவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது.

குறித்த ஆவணத்தை இரண்டு நாட்களில் அனுப்பி வைக்கவுள்ளதாக கூட்டணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக கலந்துகொள்ளப்போவதில்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் எண்ணம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வுநிலை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கூட்டத்தொடரைப் புறக்கணிக்கவில்லை எனவும் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்ல வேண்டிய இடத்தில் உரிய முறையில் தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் கூட்டணியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக பங்குபற்றக்கூடிய சந்தர்ப்பம் கிட்டினால், கூட்டத்தொடரில் பங்குபற்ற தயாராகவுள்ளதாகவும் விடயம் தொடர்பிலான கடிதங்களை அனுப்பி வருவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதனிடையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமீபத்தில் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

ஐக்கிய மற்றும் பிரிபடாத இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுய மரியாதையோடும் கண்ணியத்தோடும் பாதுகாப்புடனும் தமிழ் மக்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தை தூண்டுதல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.

இந்த விஜயத்தின்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கியஸ்தர்களை வௌிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.