‘ ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தாலும் 18 பரம்பரைகள் வாழ இந்த பணம் போதும்’

0

பண்டோரா ஆவணத்தின் பிரகாரம், 35 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக நிருபமா ராஜபக்ச திரட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 2005 முதல் 2015 வரை நிருபமா ராஜபக்ச, பிரதி அமைச்சராக செயற்பட்டுள்ளார். பண்டோரா ஆவணத்தின் பிரகாரம் 35 ஆயிரம் மில்லியன் ரூபாவை முறைகேடாக திரட்டியுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரதி அமைச்சராக இருந்த அவருக்கு எவ்வாறு இவ்வளவு நிதி, அதனை எவ்வாறு திரட்டினார், இது விடயத்தில் அரசு என்ன செய்யபோகின்றது என கேட்கின்றோம். இதுவும் போலி பிரச்சாரம் என கூறமுற்படுகின்றதா? “ – என்றார்.

அதேவேளை, பண்டோரா ஆவணம் பற்றி கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில்,

“ ஒரு குடும்பம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதியை வைத்துள்ளது. மாதம் ஒரு கோடி ரூபாயை செலவளித்தால்கூட 250 வருடங்கள் அதாவது 5 தலைமுறைகள் வாழலாம். நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தால்கூட 900 வருடங்கள் வாழமுடியும். அதாவது 18 பரம்பரைகளுக்கு போதுமானது.

பண்டோரா விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கை என்ன செய்யபோகின்றது” – என்றார்.