ஒரு பலமுள்ள அணியாக நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் – சுமந்திரன்

0

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாப்பதற்காக நாங்கள்   ஒரு பலமுள்ள அணியாக நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பேதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன்,  ”இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவாரியாக வெற்றியைப் பெற வேண்டும், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழலை மையமாக வைத்து இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாக்கவும் அரசியல் தீர்வை பெறவும் எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் கட்டியெழுப்பவும் கூடிய விதத்தில் நாங்கள் செயற்பட வேண்டுமானால் நாங்கள் ஒரு அணியாக ஒரு பலமுள்ள அணியாக நாங்கள்  நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது நாங்கள் மக்களுக்குச் சொல்கின்ற செய்தியாக இருக்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்று அணி என்று கூறி ஒவ்வொருவரும் ஆசனத்தை கைப்பற்றிச் செல்வது எந்த விதத்திலும் எமது மக்களுக்கு நன்மை பயக்காது. விஷேடமாக நாடு முழுவதிலும் வித்தியாசமானதொரு ஆட்சி முறையொன்றை அமைக்கத் தொடங்குவது எங்களுக்குத் தெரிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தமிழ் மக்கள் பலமாக இருக்கவேண்டியதன் தேவையினை இன்னும் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பலமான எதிர்க்கட்சியொன்று இருக்கும்போதுதான் ஆட்சியாளர்களை சரியான பாதையில் நடாத்தமுடியும். அதனைசெய்ய முடியாத தோற்றம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் நாங்கள் அந்த பங்களிப்பினை செய்யவேண்டிய தேவையும் ஏற்படலாம்.

விசேடமாக எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு எதிரான செயற்பாடு வெளிப்படையாகவே இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஒற்றுமையாக ஒரு அணியாக செயற்படவேண்டும். வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் ஒரு அணியாக செல்வோம். அதேபோன்று மலையகத்தில் உள்ள பிரதிநிதிகளும் ஒரு அணியாக நாடாளுமன்றம் வரவேண்டும்.

இதேபோன்று தமிழ் பேசும் முஸ்லிம் உறுப்பினர்களும்  நாடாளுமன்றத்தில் இணைந்துசெயற்பட வேண்டும். பேரினவாதம் என்பது ஒரு அணியில் நின்று மற்றவர்களை ஒடுக்குகின்ற ஒரு மனப்பாங்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நாங்கள் எந்த முயற்சியை செய்யும்போதும் ஒரு நம்பிக்கையுடன்தான் செய்கின்றோம். யுத்த நாயகன் என்று மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களின் நம்பிக்கையினைப் பெற்றவர் என்ற வகையில் அவர் தங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார் என்ற நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. தமிழ் மக்களுக்கான தீர்வினை மஹிந்தவினால் வழங்க முடியும். செய்யக்கூடிய மனப்பாங்கு அவருக்கு இருக்கின்றதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சிங்கள மக்களின் நம்பிக்கையினை முழுமையாக பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷ. அவர்களுடன் நாங்கள் பேசுவோம். இந்த நாடு ஒரே நாடாக இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள். ஒரே நாடாக இருக்கவேண்டுமானால் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை முழுமையாக நம்பி வாழவேண்டும். அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்றாற்போல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.