கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுகாதார அதிகாரிகளின் முடிவுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம்

0

ஒமிக்ரோன் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமைக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று முன்தினம் வெளியிட்ட தளர்வுகளுடன் கூடிய சுகாதார வழிகாட்டுதலை குறிப்பிட்டே அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக உலகம் தற்போது ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

அத்தோடு பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை என்பதும் கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் கொரோனா நிலைமை இன்னும் கட்டுப்பாட்டு மட்டத்தில் இல்லாத நிலையில் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது என உபுல் ரோஹன கேள்வியெழுப்பினார்.