கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்!

0

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில் 90 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் இரகசிய உடைமைகள் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றிய நிருபமா ராஜபக்ஷ, ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினராவார்.

அவரது கணவர் திருக்குமார் நடேசன், 2016 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் தொடர்பாக அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும் நடேசன் மற்றும் இலங்கையின் தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.

மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் எனஇ ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் $ 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்சே மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.