களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி கட்டமைப்பிலுள்ள ஒரு மின்னுற்பத்தி நிலையத்தில் இருப்பில் உள்ள எரிபொருள் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
இன்று இரவிற்குள் எரிபொருள் தீர்ந்துவிடும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.
மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்காக 1000 மெட்ரிக்தொன் எரிபொருள் , இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனத்தினூடக நேற்று பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் எனினும், அந்த எரிபொருள் இன்றைய தினத்திற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தினூடாக 165 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்கு இணைக்கப்படுகிறது.
தேவையான எரிபொருள் கிடைக்காவிடின், மின் பிறப்பாக்கிகள் செயலிழக்கும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் கடந்த 02 ஆம் திகதி எரிபொருள் இன்மையால் டீசல் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.