காணாமல்போனோரை மண்ணில் தோண்டிப்பாருங்கள் என்றவர்கள் இன்று அதற்கு தீர்வு பெற்றுதரப்போவதாக கூறுகிறார்கள் – இரா.சாணக்கியன்

0

காணாமல் போனோர் தொடர்பில் மண்ணில் தோண்டிப்பாருங்கள் என்று மொட்டுக்கட்சியின் முக்கிஸ்தர் தெரிவித்திருக்கின்ற நிலையில் இன்று அதே கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் காணாமல்போனோர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேள்வியெழுப்புகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2018 படகுக்கு வாக்களியுங்கள் அண்ணன் வெளியில் வருவார் என்று கூறினார்கள். வரவில்லை.

2020 ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக்கு வாக்களியுங்கள் அண்ணன் வெளியில் வருவார் என்று கூறினார்கள். அதற்கும் வரவில்லை. இன்று நாடாளுமன்ற தேர்தலின்போதும் படகுக்கு வாக்களியுங்கள் அண்ணன் வெளியில் வருவார் என்று கூறுகின்றனர். சிலநேரம் பிள்ளையான் வெற்றிபெற்றால் மக்கள் சிறைக்கு சென்றுதான் அவரை சந்திக்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இன்று பல கட்சிகள் தாங்கள் முஸ்லிம்களுடன் இணைந்து போட்டியிட்டால் தேர்தலில் கல்லெறி வாங்க நேரிடடும் என்ற காரணத்தினால் பல்வேறு சின்னங்களில் களமிறங்கியுள்ளனர்.

தமிழர்களின் நான்காவது பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதைப்பதற்கு பலரும் பல குழுக்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் சிங்களத்தின் கூலிகளாக கருணா போன்றவாகள் அம்பறையில் செயற்படுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்துவதற்கு முன்னர் கிழக்கில் இஸ்லாமியர்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த சிங்கள அரசாங்கம் முன்னெடுத்து வந்தது.

வடகிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம்களை பயன்படுத்துவதற்காக அவர்களின் இருப்பினை பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கிழக்கில் இஸ்லாமியர்களின் கைகள் அதிகமாக ஓங்கிவிட்டது என்று கருதினார்கள்.

கிழக்கில் இனி சிறுபான்மை சமூகம் பலமடையக்கூடாது என்று இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே கிழக்கு தொல்பொருள் செயலணி உருவாக்கம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் சிங்கள மாகாணமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் ஏன் தொல்பொருள் ஆய்வுக்கான செயலணி என்பதை தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். கிழக்கில் சிங்களவர்களின் வீதத்தினை அதிகரிப்பதற்காகவே இந்த தொல்பொருள் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன“ எனக் குறிப்பிட்டுள்ளார்.