கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம்

0

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம் நேற்று(புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக காணப்படுகின்றது.

நேற்றைய தினம் விசேட பூஜைகளுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய கிணற்றில் நீர் எடுத்துச்செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய மாமாங்கேஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கிரியைகள் ஆரம்பமானது.

பிரதான கும்பத்தினை சூழ ஆயிரத்து எட்டு சங்குகள் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் மற்றும் மகா யாகம் நடாத்தப்பட்டு சங்காபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேக நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடைபெற்ற இந்த உற்சவத்தில் சுவாமி வெளிவீதியுலாவுடன் சுவாமியின் திருப்பொன்னூஞ்சலும் நடைபெற்றது.

இதன்போது கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டினை பாதுகாக்கவும் கொரோனா அச்சுறுத்தலினால் உயிரிழந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காகவும் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.