கிழக்கில் உருவாகியுள்ள புதிய இஸ்லாமிய இனவாத அமைப்பா “சுப்பர் முஸ்லிம்“?

0

கல்முனையை கேந்திரமாகக் கொண்டு இஸ்லாமிய இனவாத குழுவொன்று உருவாகி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

சுப்பர் முஸ்லிம் என்ற பெயரில் இந்த அமைப்பு அடையாளப்படுத்தப்படுவதாக பிரபல சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “இந்த அமைப்பின் தலைவராக கலன்தர் லெப்பை மொஹமட் என்ற நபர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் இணைந்து 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திற்காக சேர்க்கப்பட்ட பணத்தின் ஊடாக, முறையற்ற விதத்தில் இந்த அமைப்பை அவர் ஆரம்பித்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த காலப் பகுதியில் குறித்த நபர், வீட்டிற்குள் இருந்தவாறு இஸ்லாமிய மார்க்கத்தை கற்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு முதல் சுப்பர் முஸ்லிம் அமைப்பை ஆரம்பித்து, அதனூடாக இனவாத செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அமைப்பில் சுமார் 300 வரையான உறுப்பினர்கள் இணைந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த அமைப்புடன் ஆயிரக்கணக்கானோர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அறிய கிடைக்கின்றது.

கலன்தர் லெப்பை மொஹமட், கல்முனையிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளதாகவும், அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனவாத போதனைகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொத்துவில் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் போதனைகள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஷரியா சட்டத்தின் பிரகாரம், செயற்பட வேண்டும் என்பது இவரது கொள்கையாக காணப்படுகின்றது என கூறப்படுகின்றது.

சுப்பர் முஸ்லிம் அமைப்பிலுள்ள உறுப்பினர்கள், தமது பெற்றோர், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பிலுள்ளவர்களுக்கு வைத்திய சிகிச்சைகளை பெற தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண்களுக்கு வீட்டிலிருந்து வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.