குறைகள் மற்றும் தவறுகளை கருத்திற்கொண்டு கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது – ஜனாதிபதி

0

குறைகள் மற்றும் தவறுகளை கவனத்திற்கொண்டு கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் வைரஸை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகின் அனைத்து நாடுகளைப் பார்க்கிலும் முன்னிற்பதாக தொற்றுநோய் தொடர்பில் உலகின் முன்னணி வைத்திய நிபுணர்களில் ஒருவரான ஹொங்கொங்கில் உள்ள பேராசிரியர் மலிக் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கு பங்களித்த சுகாதார, பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஏனைய அனைவரையும் பாராட்டிய ஜனாதிபதி, இந்த நிலைமையை தொடர்ந்தும் பாதுகாத்து பேண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வைரஸை ஒழிப்பதில் மக்கள் குழுக்களாக வாழும் பிரதேசங்கள் மற்றும் விசேட பிரிவினர் தொடர்பில் பொது முறைமையில் இருந்து விலகி திட்டமிடுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடற்படையில் 997பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 159பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 80வீதமானவர்களிடம் எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தியாகும் என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுமக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சுதேச மருந்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயவேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுதேச மருத்துவர்களினதும் மேலைத்தேய மருத்துவர்களினதும் தலையீட்டில் அதற்காக தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வைரஸை ஒழிப்பதற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை அதிலிருந்து விடுபடுவதற்கு இதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் சுட்டிக்காட்டினர்.

நிறுவனங்களை நடத்திச் செல்லும் போது அரசாங்கம் வழங்கியுள்ள பரிந்துரைகள் நடைமுறையாகின்றனவா என்பது குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

செய்யக்கூடாத விடயங்களை விளங்கிக்கொண்டு பொது வாழ்க்கையை பேண வேண்டும். அனைத்து தரப்பினரும் அதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் வளர்ந்தவர்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரிவாக சுட்டிக்காட்டினார்.

இது வரையில் 21000 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3வீதமானவர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர். தொடர்ந்தும் பரிசோதனை செய்வதற்கு தேவையான பரிசோதனை உபகரணங்களை நாட்டில் உற்பத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் சுகாதார துறை அடைந்துள்ள முக்கிய வெற்றியாகும். அவ்வுற்பத்திகளை மேம்படுத்துவதில் பாதிப்பு செலுத்தும் குறைபாடுகளை அறியத்தருமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சந்தையில் விற்பனைக்குள்ள கிருமித்தொற்றகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தங்களின் நியமங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் வைத்தியர்கள் கேட்டுக்கொண்டனர்.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு செய்யும் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினர் பயன்படுத்தும் விசேட ஆடைத் தொகுதியின் நியமங்கள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.