கொரொனா வைரஸ் தாக்கம் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றைய தினம் சீனாவில் 108க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்து அதிகமானவர்கள் உயிரிழந்த நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வரை வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1016ஆக அதிகரித்துள்ளது என தேசிய சுகாதார ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் புதிதாக 2478 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42638 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் ஹூபே மாகாணத்தில் 103 மரணங்கள் பதிவாகின. வைரஸ் தொற்று ஆரம்பித்த மாகாண தலைநகரான வுஹானில் நேற்று மாத்திரம் 63 பேர் உயிரிழந்தனர்.

ஏனைய உயிரிழப்புகள் ஹிலோங்ஜியாங் அன்ஹுய் மற்றும் ஹெனான் மாகாணங்களிலும் தியான்ஜின் மற்றும் பெய்ஜிங் நகரங்களிலும் பதிவாகின என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

திங்களன்று பிரதமர் லி கெக்கியாங் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களிற்கு மூலப்பொருள் மற்றும் தொழிலாளர்
பற்றாக்குறையை தீர்க்கவும் முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை வழங்கவும் மேலதிக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 20000 மருத்துவ பணியாளர்கள் ஏற்கனவே வுஹானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.