கொரோனாவினால் வெறிச்சோடியது நிலாவெளி கடற்கரை

0

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத்துறை ஆகும். அத்துறையில் தனக்கென ஓர் இடத்தினை வகிப்பது திருகோணமலை – நிலாவெளி கடற்கரை பிரதேசமாகும்.

என்றுமே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் நிலாவெளி கடற்கரையானது தற்போது நிலவி வரும்சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளது வருகை தடைப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதன்காரணமாக சுற்றுலாத்துறையை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலாவெளி கடற்கரையிலிருந்து புறாத்தீவு, டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு சாவாரி சேவையில் ஈடுபடுவோர் தமது தொழிலைமுன்னெடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுலாப் படகுகளில் ஆசனங்கள் பொருத்தப்பட்டதனால் தம்மால் அப்படகுகளை மீன்பிடிக்கு பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவித்தனர்.

கடந்த வருடம் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான சுற்றுலாத்துறையானது மீண்டெழுந்து வந்துகொண்டிருந்த நிலையில் இவ்வருடத்தில் ஏற்பட்ட இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாத்துறையானது மீண்டும் சரிவினை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.