கொரோனா தொற்றியவர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் சிகிச்சை முறை! நோயாளி ஒருவர் வெளியிட்ட தகவல்

0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர் ஒருவருக்கு எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகின்றதென பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் பேஸ்புக் ஊடாக இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளார்.

நான் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெறுகின்றேன். இன்னும் 7 நாட்களில் வீட்டிற்கு சென்று விடுவேன். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எனக்கு எவ்வித மருந்துகளும் வழங்கப்படவில்லை.

சூடான பானம் மாத்திரமே வழங்கப்பட்டது. தலைவலி ஏற்பட்டால் மாத்திரம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்று வழங்கப்படுகின்றது.

விசேடமாக சுடு நீரில் உப்பு சேர்த்து தொண்டை கழுவப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு பானத்தை பருக வேண்டும். அது கஞ்சி, தேனீர், கொத்தமல்லி அவித்த நீர், சுடு நீர் போன்ற எந்த பானமாக இருந்தாலும் பருக வேண்டும்.

அத்துடன் நாள் ஒன்றிற்கு 2 அல்லது 3 முறை ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது ஒரு முறை மூக்கினால் சுவாசித்து வாயினால் ஆவியை வெளியேற்ற வேண்டும். அடுத்த முறை வாயினால் சுவாசத்தை உள் எடுத்து மூக்கினால் வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் இடையில் சிக்கியிருக்கும் வைரஸ் வெளியேறி விடும்.

அத்துடன் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சவர்க்காரமிட்டு நன்கு கைகளை கழுவ வேண்டும். செனிடைஸர் பயன்படுத்துவதற்கு பதிலாக சவர்க்காரம் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.

உங்களுக்கு கொரோனா தொற்றும் என்ற சந்தேகம் இருந்தால், உங்களுக்கான தனியான சவர்க்காரம், துடைப்பான் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் உணவு உட்கொள்ளும் நேரத்தை தவிர்த்து ஏனைய அனைத்து சந்தர்ப்பத்திலும் முகக் கவசம் அணிந்திருப்போம். உறங்கும் போதும் அணிந்திருப்போம். ஒரு நாளில் 3 முகக் கவசங்கள் மாற்றுவோம்.

விசேடமாக கொரோனா தொற்றிய பின்னர் மனதளவில் தைரியத்துடன் இருக்க வேண்டும். அதுவே கொரோனாவுடன் போராடுவதற்கான சிறந்த ஆயுதமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.