கொழும்பில் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் வெளியிட்ட தகவல்

0

மஹரகம், பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி தனக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் அனைத்து தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் கலைமகன் பிரவின் என்ற இளைஞனாகும். மரக்கறி விற்பனையில் ஈடுபடும் குறித்த இளைஞன் கடந்த 29ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் பண்டாரவளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியமையினால் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

“காலை 8 – 8.15 மணியளவில் நான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிட்டேன். அங்கு நீண்ட நேரம் இருந்தமையினால் வெயில் சூடு அதிகரித்து எனக்கு தூக்கம் வந்து விட்டது. தூக்கம் காரணமாக வாகனத்தின் சக்கரம் அடுத்த பக்கம் திரும்பியமை உட்பட எனக்கு தெரியவில்லை.

திடீரென சத்தம் கேட்டு எழுந்த போது எனது வாகனம் ஒருவரை மோதவிருந்ததனை நான் அவதானித்தேன். அப்போதே அங்கு என்னை தாக்கிய பொலிஸ் அதிகாரி இருந்தமை எனக்கு தெரியவந்துள்ளது.

அவரை மோதிவிடாமல் வாகனத்தை நிறுத்தி விடுவதற்கான அடுத்த பக்கம் திரும்பும் போது மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரி மீது மோதிவிட்டேன்.

விபத்தையடுத்து வாகனத்தை நிறுத்தியவுடன் நான் வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன்னர் பொலிஸட அதிகாரி வாகன கதவை திறந்து என்னை அடித்தார்.

வாகனத்தை விட்டு இறங்கியவுடன் மீண்டும் என்னை அவர் தாக்கினார். அத்துடன் அங்கிருந்த ஒருவரும் என்னை தாக்கினார்.

பொலிஸ் அதிகாரி என்னை தாக்கும் போது தமிழன் என கூறி தகாத வார்தைகளையும் பயன்படுத்தினார். அதன் பின்னர் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்” என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.