கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

0

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலை மாற்றப்பட்டு இப்போது ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் காணப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார்.

தற்போது சீன காலனியாக கொழும்பு துறைமுக நகரம் மாறினால் அது போரின் போது பிரபாகரன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை விட அதிக அதிகாரம்கொண்ட பகுதியாக இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார்.

ஒரு நல்ல சட்டத்தை எவரும் தடுக்கப் போவதில்லை. அதனை இயற்றுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் இருக்க வேண்டும், அமைச்சரவை இறுதியாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இங்கு அந்த நிலைமை இல்லை என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

2001-2004 க்கு இடையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியை பிரபாகரன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

நோர்வே கொண்டுவந்த சமாதான உடன்படிக்கை மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனி மாநிலத்தை உருவாக்க பிரபாகரனை அனுமதித்ததாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.